21 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் - [ சதயம் -Sadhabhishak]


ஸ்தல வரலாறு: 

அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும் புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

சிறப்பம்சம்: 

அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81ம் வயதில், இத்தலத்தில் உழவாரப் பணி செய்தபோது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது. அப்பருக்கு தனி சன்னதி உள்ளது. சித்திரை சதயத்தை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடத்தப்படுகிறது. அப்போது, பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது மனதை உருக்கும் காட்சியாக இருக்கும். அக்னிபுரீஸ்வரரின் துணைவியாக அம்பாள் கருந்தார் குழலி அருள்பாலிக்கிறாள். அக்னிபுரீஸ்வரர் நீங்கலாக, வர்த்தமானேஸ்வரர் சன்னதியும், அவரது துணைவியாக மனோன்மணி அம்மையும் அருள் செய்கின்றனர்.  சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.

அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலம். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு.  வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவர்த்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர். அம்பாள் கருந்தார்குழலிக்கு திருமணம் ஆகாத பெண்கள், மாலை பூஜையின் போது, வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர்.

பிரதான தேவதை[Pradhana Devatha] :  வருணன்[Varuna]
அதி தேவதை [ AtiDevatha ]  :  யமன் [Yama]

இருப்பிடம்: 

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.

திறக்கும் நேரம்:  காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி.

போன்:+91 - 4366-236 970.

No comments:

Post a Comment