18 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்-ஆயில்யம்[ ]



ஸ்தல வரலாறு: 

ஒரு சமயம் துர்வாசமகரிஷி, சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் நடையைப் பார்த்து, நீர் நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர், என்று கேலி செய்ததுடன், அவரைப் போல நடந்தும் காட்டி அவமானப்படுத்தினான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான்.துர்வாசரின் அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றான். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் இவர் கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்திரன் தன் ஆணவம் நீங்க, குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்தான்.

இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து வழிபாடு செய்து திருந்தினான்.இதனால் இத்தலம், திருந்து தேவன்குடி என்றழைக்கப்படுகிறது. இப்பெயரைச் சொன்னால் உள்ளூர்வாசிகளுக்கு தெரிவதில்லை.நண்டுகோயில் என்று சொன்னால் தான் புரியும்.

சிறப்பம்சம்: 

கடக ராசிக்கு உட்பட்ட ஆயில்ய நட்சத்திரத்திற்கு சிறந்த மருத்துவ குணங்கள் உண்டு. மேலும், தெய்வ பக்தியுடன் எதையும் செய்து சாதிக்க முடியும் என்ற ஆன்மிக ரீதியான மனத்தை இது தரும். மனக்குழப்பத்தையும், நோய்களையும் தீர்க்கவல்லது. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர நாள் மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும், உடலும் உள்ளமும் நலம் பெறும். அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் இங்கு வழிபாடு செய்யலாம். நீண்டகாலமாக நோயுள்ள பிற நட்சத்திரக்காரர்களும் இந்த நாட்களில் கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு, மருந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை அம்பிகையர்: 

இங்கு அருமருந்து நாயகி, அபூர்வநாயகி இரண்டு அம்பிகையர் காட்சி தருகிறன்றனர். பிரதான அம்பிகையாக அபூர்வநாயகி கருதப்படுகிறாள். நுழைவுவாயிலில் யோக சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில் காட்சி தருகிறார்.

கோயில் அமைப்பு: 

இத்தலத்தில், கற்கடக விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

கோபமும் வேகமும் கொண்ட இவர்கள் செல்வந்தர்களாக இருப்பர். சிவந்த மேனி, அகலமான கண்களைப் பெற்றிருப்பர். நியாய தர்மங்களை மற்றவர்களுக்குப் போதிப்பர். மந்த குணமும் இருக்கும். நகை அணிதல், பணம் சம்பாதிப்பதில் அலாதிப் பிரியம் இருக்கும். செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வர்.

பிரதான தேவதை[Pradhana Devatha] : ஸர்பராஜன்[Sarparaja] 
அதிதேவதை[Atidevatha] : ஆதிசேஷன்[Adisesha]  

இருப்பிடம்: 

கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

திறக்கும் நேரம்: காலை 9- மதியம் 1.30 மணி, மாலை 4 - இரவு 7 மணி.

போன்:+91 - 435- 200 0240, 99940 15871.

No comments:

Post a Comment