குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பான் என்பதற்கிணங்க, பரங்குன்றம், பழநிமலை, தணிகைமலை, சுவாமி மலை, சென்னி மலை, சிவன் மலை, மருத மலை, குன்றக்குடி போன்ற மலைகளில் வசிக்கும் முருகப் பெருமான் விராலி மலையிலும் வீற்றிருந்து பேரருள் செய்கிறார்.
விராலி செடிகள் விரவியிருந்த மலை என்பதால் ‘விராலி மலை’ எனப் பெயர் பெற்றது. வறட்சியைத் தாங்கி வளரும் புதர்ச் செடிகள் சித்த மருத்துவத்தில் மூலிகைச் செடியாக மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. சளி, இருமல், காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கட்டிகளையும், வீக்கத்தையும் கரைப்பதற்கு இலைகளையும், பட்டையினையும் பயன்படுத்துகிறார்கள்.
எனவே விராலிச் செடிகளே இத்திருத்தலத்தின் விருட்சமாக விளங்குகிறது. இப்போது அங்கு விராலிச் செடிகள் காணப்படவில்லை. வில்வம், தாண்டி, மகிழம், வேங்கை மரங்களுடன் குரா மரங்களும் உள்ளன. திருச்சியிலிருந்து 28 கி.மீ தூரத்தில் மதுரை செல்லும் புறவழிச் சாலையின் வழியாகவோ அல்லது புதுக்கோட்டையிலிருந்தோ விராலி மலைக்கு வரலாம். தற்போது குன்றினைச் சுற்றி கட்டிடங்களும், கடைகளும் எழுந்துள்ளன.
அடிவாரத்தில் சிவன்:
இம்மலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் நமது இடக்கைப் புறம் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதன் பெயர் வீரகேஸ்வரர் ஆலயம். இங்கே சிவபெருமான் லிங்க வடிவமாக இல்லாமல், திரு உருவாக நிற்கின்றார்.அவரின் வலதுபுறம் நந்தியெம்பெருமான் உருவமாக இருப்பது பெருஞ்சிறப்பு. எனவே இங்கே பிரதோஷ கால வழிபாடு களை கட்டுகிறது.
அஷ்டமா சித்தி:
207 செங்குத்தான படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இடையே சிறிய கோவிலில் பிள்ளையாரும், அருகே இடும்பனும், கடம்பனும் முருகனுக்குரிய மலைக் கோவில்களைப் போலவே எழுந்தருளி உள்ளார்கள். எதிரே சந்தான கோட்டம் என்ற மண்டபமும், கோவிலும் உள்ளன. அங்கே சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் காட்சி தருகின்றனர்.
இங்குதான் முருகப்பெருமான், அருணகிரி நாதருக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்ததாக சொல்கிறார்கள். அங்கே ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்து அருணகிரிக்கு உபதேசிக்கும் சுதை வடிவம் காட்சி தருகிறது.
வயலூரில் வழிபட்ட போது அருணகிரியாரை ‘விராலிமலைக்கு வா’ என்று முருகப் பெருமான் உபதேசித்தார். வழி தெரியாமல் தவித்தவருக்கு இறைவன் வேடன் வடிவில் வந்து அழைத்துக் கொண்டு இம்மலையில் விட்டு விட்டு மறைந்து விட்டதாக ஐதீகம். மலைக்கோவிலில் இந்நிகழ்வு பற்றி வண்ணச் சிற்பம் ஒன்று மின்னுகிறது.
அனிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அஷ்டமா சித்திகளை முருகனிடமிருந்து அறிந்து கொண்ட அருணகிரி நாதர் பதினாறு திருப்புகழில் முருகனை நெகிழ்ந்து நெகிழ்ந்து புகழ்ந்துள்ளார். படிகள் ஏறி கடந்து மலைக் கோவிலுக்குச் செல்லும் போது எதிரே அம்பலத்தரசன் நடராசரின் ஐம்பொன் சிலை தெற்கு நோக்கித் தோன்றுகிறது.
அங்கே பிரகாரத்தை வலம் வரும்போது – விஸ்வநாதரும் மீனாட்சியும் தன் மகனுக்குக் காவலாகத் தனி சன்னிதியில் உள்ளனர். விநாயகர், தட்சிணா மூர்த்தி பின்புறம் நாக வடிவங்கள் உள்ளன. கால பைரவரும், நவக்கிரகங்களும் காட்சி தருகின்றனர்.
அழகனின் வாகனமான மயிலினைக் கடந்து உள்ளே சென்றால் மூலவராக ஆறுமுகப் பெருமான் அழகிய தோற்றத்தில் கருணை வழியும் கண்களோடு பேரருள் பொழிகின்றார். இச்சாசக்தி, கிரியா சக்தியான வள்ளி நாயகியும், தெய்வானையும் இருபுறமும் இருக்க, ஞானசக்தியான வேலினை கரத்தில் ஏந்தியுள்ளார்.
பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபெருமான் கொய்து விட்டதனால், நாரதர் சிவனிடம் வந்து ‘பிரம்மாவின் தலையொன்றைக் கிள்ளி எடுத்தது நான்முகனாக்கியது தவறு’ என்று வாதிட்டு, சிவபிரானின் கோபப் பார்வைக்கு ஆளானார்.
அதனால் நாரதரின் கையில் இருக்கும் மகதி எனும் வீணை வளைந்து விட்டது. சிவ அபசாரம் செய்ததற்காக நாரத முனிவர், சிவக் குமரன் முருகனை இத்தலத்தில் வணங்கி உபதேசம் பெற்று விமோசனம் அடைந்தார். அதன் நினைவாக வளைந்த வீணையுடன் இருக்கும் நாரதரின் உற்சவமூர்த்தம் இத்திருக்கோவிலில் உள்ளது.
திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது நாரதரும் உலா வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இத்திருக்கோவிலில் மற்ற முருகன் கோவில்களைப் போலவே ஐப்பசி மாத வைகாசி விசாகம் விழா 10 நாட்களும், கந்தசஷ்டி உற்சவமும், தைப்பூசம் திருவிழா 10 நாட்களும் நடைபெறுகின்றன. நாக தீர்த்தத்தின் நடுவே நாகப்பிரதிஷ்டை உள்ளது.
பிரார்த்தனைத் தலம் :
குழந்தைச்செல்வம் இல்லாதவர்கள் இத்திருக்கோவில் சண்முகநாதனை பிரார்த்தித்துக் கொண்டால் குழந்தைப் பேறு கிடைக்கிறது. அக்குழந்தையை இக்கோவிலுக்கு கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்கிறார்கள். பின்னர் தவிடு கொடுத்து, அதற்கு பதிலாக அந்தக் குழந்தையை தத்து எடுத்துச் செல்கிறார்கள்.
தலைமுடி காணிக்கை செலுத்தி, காது குத்தி, அந்தக் குழந்தைக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. தீவினை தீரவும், நோயுற்றவர்களின் பிணிதீரவும், மன அமைதி கிடைக்கவும் வேண்டிக் கொள்கிறார்கள். நல்லவை நடந்ததும், அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், காவடி எடுத்தல் போன்ற பக்திச் செயல்களால் ஆறுமுகனுக்கு அன்பினைக் காணிக்கையாக்குவது அடியவர்களின் வாடிக்கை.
தெற்கு குடகு சாமி என்னும் சதாசிவசாமி, ஆறுமுகச்சாமி, பகடைச்சாமி போன்ற சித்தர்கள் வசித்த, தேவ ரகசியங்கள் நிறைந்த மலை, நாரதரின் தேவகானம் ஒலிக்கும் மலை, மயில்கள் தோகை விரித்தாடும் இயற்கை சிரிக்கும் விராலிமலை முருகனின் தலங்களில் முக்கியமானது.
பல காலம் முன்பு இம்மலைக் கோவிலில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதில் பணியாற்ற வேண்டி, கருப்பமுத்து என்னும் அன்பர், தனது இருப்பிடத்திலிருந்து ஆற்றைக்கடந்து கோவிலுக்கு வரமுற்பட்டார். அப்போது ஆற்றில் வெள்ளம் பொங்கி வந்து கொண்டிருந்தது. மழைக்காலமாக இருந்ததால் குளிர் காற்று கருப்பமுத்துவின் உடலை துளைத்தது.
ஆற்றைக் கடந்து கோவிலுக்குச் சென்று பணியாற்ற முடியவில்லையே என்ற மனக் கவலையுடன், குளிரால் நடுங்கிய உடலுடன் இருந்த கருப்பமுத்து, சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வழிப்போக்கன் போல வந்த ஒருவர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார்.
‘உனக்கும் குளிருமல்லவா?, இந்தா இந்த சுருட்டைப் பிடி’ என்று உதவி செய்த வழிப்போக்கனுக்கு, சுருட்டைக் கொடுத்தார். பின்னர் அந்த வழிப்போக்கன் மறைந்து விட்டார். கோவிலுக்கு சிறிது நேரத்தில் வந்து வேலைகளைச் செய்ய ஆயத்தமான கருப்பமுத்து முருகன் சன்னிதியில் சுருட்டு இருப்பதையும் பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்து, ‘ஆற்றைக் கடக்க உதவி செய்த வழிபோக்கன் ஆறுமுகப் பெருமானே’ என்று உணர்ந்து, அன்பு மேலீட்டால் அழுது புரண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அன்பின் வெளிப்பாடாக, அன்பன் ஒருவன் தந்தது அற்பச் சுருட்டு என்றாலும், அதை ஆண்டவன் ஏற்றுக் கொண்டது கருணைக்கு கட்டியம் கூறுவதல்லவா? அதனால் அன்று முதல், விராலி மலை வேலவனுக்கு தினமும் சாயரட்சை வேளையில் சுருட்டு படைக்கப்பட்டு வருகிறது. அதனைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்லும் பக்தர் களின் வயிற்று வலி போன்ற நோய்கள் நீங்குவதாகச் சொல்கிறார்கள்.
Unravelling the beauty of Ancient Temples, and dedicated to pure Divinity, I hope that my pages would serve as an alternative to quench the thirst (or form a base) for visiting these temples and other historical places in India. Hoping to bring blissfulness to the mind and the soul to all my readers. You as an important critic, I would really appreciate your valuable comments that will improve the quality of my write-ups on Temples and their Sthala puranams. Thank you for visiting my pages.
04 July 2014
திருமண தோஷம் நீக்கும் திருக்கண்டியூர்
பிரம்மசிரகண்டீஸ்வரர் - திருக்கண்டியூர்.
|
ஒரு சமயம் பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார். உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார். அம்பாள், சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு, உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது. தன் தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார்.
சிவனும், பிரம்மாவின் தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிவபெருமான் துண்டித்து பிரம்மதேவரின் தலை, அப்படியே ஈசனின் கையில் ஓட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது.
அற நெறியை உலகத்தவரும் உணர்ந்து கடைபிடிக்குமாறு தாமே அதனை கடைபிடித்து காட்ட சிவபெருமான் எண்ணினார். அதன்படி, பைரவரை பார்த்து இத்தீவினை தீர நீயும் பிச்சை ஏற்க வேண்டும் என்று கூறினார். பைரவர் பல சிவ தலங்களுக்கும் சென்று பிச்சை கேட்டு திரிந்தார்.
கண்டியூருக்கு வந்து இந்தக் திருக்கோவிலை அடைந்தவுடன் அத்தலை, சிவபெருமானின் கையை விட்டு போனது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இதனையடுத்து பிரம்மதேவர் ஆணவமின்றி தன் துணைவியும் தானுமாய் இக்கோவில் இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்பு தொழிலை பெற்றார் என்கிறது தலவரலாறு.
பிரம்மனுக்கு தனிக் கோவில் :
ஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார்.
பிரம்மா அன்னப்பறவையாக சென்று சிவபெருமானது முடியை கண்டதாக பொய் கூறிய காரணத்தால் ‘உனக்கு எங்கும் கோவில் இல்லாமல் போகக்கடவாய்’ என்று சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்திற்கு ஏற்ப இங்கு பிரம்மனுக்கும் பெரிய கோவில் இருந்தும், இடிபாடுகளுடன் வழிபாடில்லாது இருப்பது சிவ சாப வன்மை போலும்.
பிரம்மனது கோவிலுக்கு பக்கமே அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.
துவார பாலகர்கள் இல்லை :
துரோணர் தமக்கு மகப்பேறு இல்லாத குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு எய்தினார். இந்த தலம் அட்ட வீரட்ட தலங்களில் முதல் தலமாகவும், சப்தஸ்தான தலங்களில் 5–வது தலமாகவும் போற்றப்படுகிறது. எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போல் இத்தலத்தில் துவார பாலகர்கள் இல்லை.
முருகப்பெருமான் ஞான குருவாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டப வாசலுக்கு வலது புறத்தில் சப்தஸ்தான தலங்களை குறிக்கும் வகையில் 7 லிங்கங்களும், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் 5 லிங்கங்களும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார்.
மயில் வாகனம் இங்கு இல்லை. நவக்கிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றிருக்கின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்து விட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
திருமணம் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிற்றை கட்டி இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம். இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர்.
சூரியன், முனிவர்கள் ஆகியோர் வழிப்பட்ட தலம். சூரியன் வழிபட்டதால் இத்தலத்தில் உள்ள இறைவன் மீது மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளிபடுகின்றது.
போக்குவரத்து வசதி :
தஞ்சாவூர் – திருவையாறு செல்லும் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் கண்டியூர் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. கும்பகோணம் – திருவையாறு மார்க்கமாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.
திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோவில்
பக்தவச்சலப் பெருமாள் கோவில் |
தின்னனூர் என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில் புகழ் பெற்ற சிவாலயமான இருதயாலீஸ்வரர் கோவில் அருகில் இத்தலம் உள்ளது. மகாலட்சுமிக்கு "திரு'' என்றும் ஒரு பெயர் உண்டு. மகாலட்சுமி சில காலம் இந்த ஊரில் வந்து தங்கி இருந்ததால், அதை உணர்த்தும் வகையில் இந்த ஊருக்கு "திருநின்றவூர்'' என்ற பெயர் ஏற்பட்டது.
இதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-
ஒரு சமயம் பெருமாளுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே சிறு ஊடல் ஏற்பட்டது. கோபம் கொண்ட மகாலட்சுமி பாற்கடலை விட்டு விலகி பூமிக்கு வந்தாள். நேராக அவள் இத்தலம் உள்ள ஊருக்கு வந்து தங்கினாள். இதற்கிடையே மகளை (மகாலட்சுமியை) காணாத சமுத்திராஜன், அவளை பல இடங்களில் தேடினார்.
கடைசியில் இங்கு வந்து மகாலட்சுமியை கண்டார். மகளைக் கண்ட மகிழ்ச்சியில் "என்னைப் பெற்றத் தாயே'' என்று அழைத்தார். பிறகு பாற்கடலுக்கு திரும்பி வர கூறினார். ஆனால் மகாலட்சுமி அதை ஏற்கவில்லை. இதனால் திரும்பிச் சென்ற சமுத்திரராஜன் நடந்ததையெல்லாம் பெருமாளிடம் கூறினார்.
''பகவானே தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்'' என்றார். அதற்கு பெருமாள், "நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் வருகிறேன்'' என்றார். அதன்படி பெருமாள் வந்து மகாலட்சுமியை அழைத்தார். சமாதானம் அடைந்த மகாலட்சுமி மீண்டும் பெருமாளுடன் பாற்கடலில் வாசம் செய்தாள்.
இதனால் பாற்கடல் மீண்டும் புதுப்பொலிவைப் பெற்றது. மகாலட்சுமி சில காலம் தங்கி இருந்த தலம் என்பதால் இத்தலத்துக்கு திருநின்றவூர் என்ற பெயர் ஏற்பட்டது. மகாலட்சுமி இத்தலத்தில் எழுந்தருளி இருந்த சமயத்தில் ஒரு அற்புதம் நடந்தது. ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் மூலம் அந்த அற்புதம் நடந்தது.
ஒரு தடவை திருமங்கை ஆழ்வார் திவ்ய தேசங்களை கண்டு வழிபட்டும், பாசுரங்கள் பாடியும் வழிபட்டு வந்தார். திருவள்ளூர் கோவிலுக்கு சென்று விட்டு திருநின்றவூர் தலத்துக்கு வந்தார். அந்த சமயம் நடை சாத்தப்பட்டு விட்டது. பெருமாள் ஏகாந்த நிலைக்கு சென்று விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த திருமங்கை ஆழ்வார் அத்தலத்தில் எந்த பாசுரமும் பாடாமல் புறப்பட்டு சென்று விட்டார்.
இதை அறிந்த திருமகள் மகாலட்சுமி மிகுந்த வருத்தம் அடைந்தாள். அவள் பெருமாளிடம், "எப்படியாவது திருமங்கை ஆழ்வாரை இத்தலம் மீதான பாசுரத்தை பாட செய்யுங்கள்'' என்றாள். உடனே பெருமாள், திருமங்கை ஆழ்வாரை தேடிச் சென்றார். அதற்குள் திருமங்கை ஆழ்வார் மாமல்லபுரம் தலத்துக்கு வந்திருந்தார்.
அவரை அணுகிய பெருமாள், தான் வந்திருக்கும் நோக்கத்தை சூசகமாக உணர்த்தினார். பூரித்துப் போன திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் பக்தவச்சலம் மீது ஒரு பாசுரம் பாடினார். பாசுரத்துடன் திருநின்றவூர் திரும்பிய பெருமாள் அதை மகாலட்சுமியிடம் கொடுத்தார்.
அதை பார்த்த மகாலட்சுமி, "எல்லா திவ்யதேசங்களுக்கும் 10-க்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடியுள்ள ஆழ்வார் நமக்கு மட்டும் ஏன் ஒரே ஒரு பாசுரம் பாடியுள்ளார். அவரிடம் இன்னும் பாசுரங்கள் பெற்று வாருங்கள்'' என்றாள். கடவுளாகவே இருந்தாலும் மனைவி சொன்ன பிறகு தட்டவா முடியும்? உடனே பெருமாள், திருமங்கையாழ்வாரை தேடிப் புறப்பட்டார்.
அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ண மங்கை தலத்துக்கு சென்று விட்டார். அங்கு அவரிடம் தோன்றிய பெருமாள், தன் வருகை நோக்கத்தை உணர்த்தினார். நெகிழ்ந்து போன திருமங்கை ஆழ்வார் உடனே மீண்டும் ஒரு பாசுரம் பாடி கொடுத்தார். இதனால் பெருமாளும், மகாலட்சுமியும் மகிழ்ச்சி கொண்டனர்.
இந்த சம்பவத்தால்தான் இத்தலத்து பெருமாளுக்கு பக்தவச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது. வச்சலம், வாத்சல்யம் என்றால் அன்பும், பாசமும் கொண்டவர் என்று அர்த்தம். பக்தனிடம் அன்பு கொண்டவர் என்பதுதான் "பக்தவச்சலம்'' ஆனது. சுத்த தமிழில் பத்தராவிப் பெருமாள் என்பார்கள். ஆனால் பக்தனை தேடி சென்றவர் என்பதால் பக்தவச்சலப் பெருமாள் என்றே பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இத்தலம் பற்றியும் திருநின்றவூர் பெயர் பற்றியும் நாரதர் பிருகு மகரிஷியிடம் கூறியது, பிரம்மாண்ட புராணத்தில் 17, 18, 19-ம் அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையானது என்பதை உணரலாம். தல புராணங்களில் இத்தலத்தை கட்டியவர்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை.
என்றாலும் கி.பி. 690 முதல் 728 வரை 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். பல மன்னர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தின் ராஜகோபுரம் விஜய நகர காலத்தில் கட்டப்பட்டது.
அதை வணங்கி பலி பீடம், கருட சன்னதி, மகாமண்டபம், உள் மண்டபம் தாண்டிச் சென்றால், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பஞ்சாயுதம் தாங்கி நின்ற கோலத்தில் உள்ளதை காணலாம்.
11 அடி உயரத்தில் கிழக்கு பார்த்து சங்கு, சக்கரம் ஏந்தி காட்சித் தரும் அவர் நாம் விரும்புவதை எல்லாம் தரும் மிகச் சிறந்த வரப்பிரசாதி ஆவார். சூரிய வம்சத்து மன்னனான தர்மத்துவஜன் நாட்டை பகைவர்களிடம் இழந்து தவித்தான். பக்தவச்சலப் பெருமாளின் அருளை அறிந்த அவன், இத்தலத்துக்கு வந்து வருண குளத்தில் பங்குனி மாதம், திருவோண (கிருஷ்ணபட்சம்) நாளன்று நீராடி வழிபட்டான்.
இதனால் இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். இப்படி ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ள பக்தவச்சலப் பெருமாளை வழிபட்ட பிறகு பிரசாரம் சுற்றி வந்து, பெருமாளின் வலது புறத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தாயாரை வணங்க வேண்டும். இந்த தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு.
இந்த தாயார் முகத்தில் பக்தர்களை காத்து அருளும் கருணை நிரம்பி இருப்பதை காணலாம். குபேரன் தன் நிதியை இழந்து வாடிய போது என்னை பெற்ற தாயாரை வணங்கி மீண்டும் நிதி பெற்றான் என்று புராணம் சொல்கிறது. இங்கு மகாலட்சுமி சகல சவுபாக்கியங்களும் தரும் வைபவ லட்சுமியாக திகழ்கிறாள்.
சுற்றுப் பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரிகாத்த ராமர், ஆதிசேஷன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் பெயர் பத்தராவிப் பெருமாள். தல விருட்சம் பாரிஜாதம். இத்தலத்தில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினசரி பூஜைகள் நடக்கிறது. ஆலயத்தை சுத்தமாக பராமரிப்பதை பாராட்டலாம்.
108 திவ்ய தேசங்கள் வரிசையில் இத்தலம் 58-வது தலமாகத் திகழ்கிறது. இத்தலம் பற்றி ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில் 742-வது வரியில், "தன்னை சரண் அடைந்தவர்களுக்கு அருள்வதில் பக்தவச்சலன், தாய்ப்பசுவின் தன்மை கொண்டவன்'' என்று கூறப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமுத்திரராஜன், வருணன் இருவரும் இத்தலத்தில் பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
பக்தர்களும் அத்தகைய தரிசன அருளைப் பெற வேண்டுமானால் பக்தவச்சலப் பெருமாளை பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபடலாம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
ஆதிசேஷன் சன்னதியில் புதன்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, பால் பாயாசம் படைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு - கேது மற்றும் சர்ப்பதோஷம் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் வியாபாரம் செழிக்கும். வியாபாரம் லாபம் தருவதாக மாறும்.
நஷ்டம் தந்து கொண்டிருக்கும் வியாபாரம் லாபத்துக்கு மாறும். அது மட்டுமல்ல பக்தவச்சலப் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இழந்த சொத்து திரும்ப கிடைக்கும். காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். இழந்த பதவியை பெறலாம். அதோட பதவி உயர்வும் தேடி வரும்.
தின்னனூர் வந்து பக்தவச்சலப் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து வாருங்கள், விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள். ஆனி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று (7.7.14) நடக்கும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று பக்தவச்சலப் பெருமாளை தரிசித்தால் மனம் குளிரும் வண்ணம் நல்லவை நடைபெறும்.
திருமண பலன் தரும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோவில்
சுந்தரேஸ்வரர் கோவில் |
சிவபெருமான் மீனவராகவும், வேடனாகவும் இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் என்ற சிறப்பைக் கொண்டது திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள உற்சவர், கையில் வில்லும், சூலமும் ஏந்தி வேடமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 49–வது தலமாக விளங்குகிறது. மகாபாரத போரின் போது பாண்டவர்களும், கவுரவர்களும் சரி நிகரான நிலையில் இருந்தனர். பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அர்ச்சுனனிடம் ஒரு யோசனை கூறினார் வேதவியாசர்.
அதாவது, சிவபெருமானை வணங்கி பாசுபத அஸ்திரத்தை பெற்றால், குருசேத்திரப் போரில் கவுரவர்களை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்பதே அந்த யோசனை. இதையடுத்து அர்ச்சுனன் புன்னை மரங்கள் சூழ்ந்திருந்த புன்னகவனத்திற்கு வந்து, சிவபெருமானை வேண்டி தவம் இருந்தான்.
அவரது தவத்தைக் கலைப்பதற்காக முகாசுரன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பினான். அந்த முகாசுரன், பன்றியின் உருவம் கொண்டு அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க முயன்றான். அப்போது ஏற்பட்ட மோதலில் பன்றி உருவத்தில் இருந்த அசுரனை, அர்ச்சுனன் அம்பு எய்து வீழ்த்தினான்.
அப்போது ஒரு வேடன் தன் மனைவி மற்றும் மகனுடன் அங்கு வந்து, ‘பன்றியை நான்தான் வீழ்த்தினேன்’ என்றார். மேலும் பன்றியையும் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அர்ச்சுனன் அதனை தடுத்தான். பன்றியை அம்பு எய்து வீழ்த்தியவன் நான் என்று கூறினான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது வேடன் உருவில் வந்த சிவபெருமான், சுய உரு கொண்டு தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு உணர்த்தினார். பின்னர் அர்ச்சுனன் தவமிருந்து தன்னிடம் வேண்டிய பாசுபத அஸ்திரத்தை கொடுக்க முயன்றபோது, சிவபெருமானை பார்வதிதேவி தடுத்து நிறுத்தினார்.
‘இறைவா! ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவன் தானா?’ என்று தயக்கத்துடன் கேட்டாள் அன்னை. சிவபெருமான் அம்பிகையிடம், ‘அர்ச்சுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன்.
எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்’ என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிவாக நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பிறகு அம்பாள் சம்மதிக்கவே, சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல, இவ்விடத்தில் இருந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினான்.
ஈசனும் அவ்வாறே அருள் புரிந்தார். இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரு முறை கயிலாயத்தில் பார்வதிதேவி, சிவபெருமானிடம் வாதத்தில் ஈடுபட்டார். ‘சுவாமி! உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்?. நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!’ என்றாள்.
அன்னையின் பேச்சில் இருந்த ஆணவத்தை அறிந்த ஈசன், அவளை பூலோகத்தில் மீனவப் பெண்ணாக பிறக்கும்படி செய்தார். அதன்படி அம்பாள், இத்தலத்தில் மீனவப் பெண்ணாக பிறந்தாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஈசன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள்.
சிவபெருமானும் மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இந்த ஆலயத்தில் நடைபெறும் மாசித் திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று ‘மாப்பிள்ளை அழைப்பு’ கொடுக்கின்றனர். அப்போது மீனவர்கள் சிவனை, ‘மாப்பிள்ளை’ என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது.
திருமண தோஷம் விலக :
இத்தலத்தில் சிவபெருமானிடமும் அம்பாளிடமும் வேண்டிக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கும். விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார்.
உற்சவர் சிவபெருமான், கையில் சூலம், வில்லை ஏந்திய நிலையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி வேடமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவரின் அருகில் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ச்சுனனும், அம்பாள் தலையில் பானையுடனும் வீற்றிருக்கும் காட்சி விசேஷமானதாகும்.
திருவிழாக் காலங்களில் அர்ச்சுனன், உற்சவருக்கும் சேர்த்தே பூஜைகள் நடைபெறுகின்றன. அம்பாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சாந்தமான கோலத்தில் இருப்பதால், அன்னையை ‘சாந்தநாயகி’ என்று அழைக்கின்றனர்.
பிரச்சினைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள், இந்த அன்னைக்கு வஸ்திரதம் சாத்தி, பூஜைகள் செய்து வணங்கினால் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. திருஞானசம்பந்தர் காரைக்கால் செல்லும் முன்பாக, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்துள்ளார்.
அப்போது படகில் இருந்து இறங்க முயன்றபோது கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே அவர் கடலில் நின்றே, இத்தல இறைவனைப் பற்றி பதிகம் பாடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
கோவில் உள்தோற்றம்:
சிவபெருமான் வேடன் வடிவில் வந்ததால், இந்த ஊர் ‘வேட்டக்குடி’ என்றும், அம்பாள் மீனவப் பெண்ணாக பிறந்த தலம் என்பதால் ‘அம்பிகாபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் விநாயகர், சுந்தர விநாயகர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஐந்து நிலைகளுடன் கூடிய இக்கோவிலின் ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கிறது. சிவபெருமான் வேடனாக வந்தபோது, முருகப்பெருமானையும் அழைத்து வந்தாராம்.
எனவே இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானும், ஈசனைப் போலவே வில்லை ஏந்தியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமானும், முருகப்பெருமானும் வில் ஏந்திய நிலையில் ஒரே கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். மாசி மகத்தில் 3 நாட்கள் திருவிழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்றவை விசேஷமாக நடைபெறுகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் திருவேட்டக்குடி திருத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.
திருமண தடை போக்கும் ஈசன்
விசாலேசுவரர் |
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் உள்ளது திருமணமங்கலம் சந்தைவெளி. இங்கு விசாலேசுவரர் என்ற ஈசன் கோவில் இருக்கிறது. இக்கோவில் குரு பகவான் தலமான ஆலங்குடி ஆயத்சகாயேசுவரர் ஆலயத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் எழுந்தருளியுள்ளது.
ஆபத்சகாயேசுவரருக்கும், ஏலவார்குழலி அம்மைக்கும் இங்குதான் திருமணம் நடந்தது என்பர். அதனால் இவ்வூர் திருமணமங்கலம் எனப்பெயர் பெற்றது. திருமணம் ஆகாமல் இருப்போர், திருமணம் தடைபடுவோர் இந்த ஈசனை வழிபட்டால் திருமணம் கைகூடும்.
சர்ப்பதோஷம் போக்கும் பக்தவச்சலப் பெருமாள்
பக்தவச்சலப் பெருமாள் |
திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளை பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபடலாம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
ஆதிசேஷன் சன்னதியில் புதன்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, பால் பாயாசம் படைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு - கேது மற்றும் சர்ப்பதோஷம் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் வியாபாரம் செழிக்கும்.
வியாபாரம் லாபம் தருவதாக மாறும். நஷ்டம் தந்து கொண்டிருக்கும் வியாபாரம் லாபத்துக்கு மாறும். அது மட்டுமல்ல பக்தவச்சலப் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இழந்த சொத்து திரும்ப கிடைக்கும்.
காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். இழந்த பதவியை பெறலாம். அதோட பதவி உயர்வும் தேடி வரும். தின்னனூர் வந்து பக்தவச்சலப் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து வாருங்கள், விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
செவ்வாய் தோஷத்தை நீக்கும் பழநி முருகன்
பழநி முருகன் |
இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.
செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.
இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை)விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
ராகு-கேது பலன்கள் பெற பரிகார பூஜைகள்
ராகு-கேது |
ராகு-கேது பலன்கள் பெற சில பரிகார பூஜைகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
1. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடலாம்.
2. பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.
3. கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கலாம்.
4. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தலாம்.
5. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு மாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.
6. பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.
7. ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒரு பொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.
8. அன்னதானம் செய்ய விரும்பவர்கள் புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கலாம்.
9. வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடலாம். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
10. அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடலாம்.
ராகு தோஷம் விலக எளிய பரிகாரம்
ராகு |
ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். கல்யாண மாலை கழுத்தில் விழுவதில் தாமதம், குழந்தை பாக்கியம் கிட்டுவதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது,
தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும். இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க சில வழிகள் உள்ளன. ராகுவுக்கு தனியாக ஓரை காலம் இல்லை.
அதனால் சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய் தீபம் ஏற்றி கும்பிடுங்கள். எலுமிச்சை தீபம் கூடாது.
3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறு பிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒரு முறையாவது, பட்டீஸ்வரம் சென்று அங்குள்ள துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்து விட்டு வாருங்கள்.
முடிந்த போதெல்லாம் பக்தர்களுக்கு உளுந்துசாதம் விநியோகியுங்கள். பசுவுக்கு கடலைப் பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள்.
வசதி உள்ளவர்கள் கோமேதகக் கல் டாலர் அணியுங்கள் அல்லது கோமேதக கணபதியை கும்பிடுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.