குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பான் என்பதற்கிணங்க, பரங்குன்றம், பழநிமலை, தணிகைமலை, சுவாமி மலை, சென்னி மலை, சிவன் மலை, மருத மலை, குன்றக்குடி போன்ற மலைகளில் வசிக்கும் முருகப் பெருமான் விராலி மலையிலும் வீற்றிருந்து பேரருள் செய்கிறார்.
விராலி செடிகள் விரவியிருந்த மலை என்பதால் ‘விராலி மலை’ எனப் பெயர் பெற்றது. வறட்சியைத் தாங்கி வளரும் புதர்ச் செடிகள் சித்த மருத்துவத்தில் மூலிகைச் செடியாக மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. சளி, இருமல், காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கட்டிகளையும், வீக்கத்தையும் கரைப்பதற்கு இலைகளையும், பட்டையினையும் பயன்படுத்துகிறார்கள்.
எனவே விராலிச் செடிகளே இத்திருத்தலத்தின் விருட்சமாக விளங்குகிறது. இப்போது அங்கு விராலிச் செடிகள் காணப்படவில்லை. வில்வம், தாண்டி, மகிழம், வேங்கை மரங்களுடன் குரா மரங்களும் உள்ளன. திருச்சியிலிருந்து 28 கி.மீ தூரத்தில் மதுரை செல்லும் புறவழிச் சாலையின் வழியாகவோ அல்லது புதுக்கோட்டையிலிருந்தோ விராலி மலைக்கு வரலாம். தற்போது குன்றினைச் சுற்றி கட்டிடங்களும், கடைகளும் எழுந்துள்ளன.
அடிவாரத்தில் சிவன்:
இம்மலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் நமது இடக்கைப் புறம் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதன் பெயர் வீரகேஸ்வரர் ஆலயம். இங்கே சிவபெருமான் லிங்க வடிவமாக இல்லாமல், திரு உருவாக நிற்கின்றார்.அவரின் வலதுபுறம் நந்தியெம்பெருமான் உருவமாக இருப்பது பெருஞ்சிறப்பு. எனவே இங்கே பிரதோஷ கால வழிபாடு களை கட்டுகிறது.
அஷ்டமா சித்தி:
207 செங்குத்தான படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இடையே சிறிய கோவிலில் பிள்ளையாரும், அருகே இடும்பனும், கடம்பனும் முருகனுக்குரிய மலைக் கோவில்களைப் போலவே எழுந்தருளி உள்ளார்கள். எதிரே சந்தான கோட்டம் என்ற மண்டபமும், கோவிலும் உள்ளன. அங்கே சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் காட்சி தருகின்றனர்.
இங்குதான் முருகப்பெருமான், அருணகிரி நாதருக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்ததாக சொல்கிறார்கள். அங்கே ஆறுமுகப் பெருமான் மயில் மீது அமர்ந்து அருணகிரிக்கு உபதேசிக்கும் சுதை வடிவம் காட்சி தருகிறது.
வயலூரில் வழிபட்ட போது அருணகிரியாரை ‘விராலிமலைக்கு வா’ என்று முருகப் பெருமான் உபதேசித்தார். வழி தெரியாமல் தவித்தவருக்கு இறைவன் வேடன் வடிவில் வந்து அழைத்துக் கொண்டு இம்மலையில் விட்டு விட்டு மறைந்து விட்டதாக ஐதீகம். மலைக்கோவிலில் இந்நிகழ்வு பற்றி வண்ணச் சிற்பம் ஒன்று மின்னுகிறது.
அனிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அஷ்டமா சித்திகளை முருகனிடமிருந்து அறிந்து கொண்ட அருணகிரி நாதர் பதினாறு திருப்புகழில் முருகனை நெகிழ்ந்து நெகிழ்ந்து புகழ்ந்துள்ளார். படிகள் ஏறி கடந்து மலைக் கோவிலுக்குச் செல்லும் போது எதிரே அம்பலத்தரசன் நடராசரின் ஐம்பொன் சிலை தெற்கு நோக்கித் தோன்றுகிறது.
அங்கே பிரகாரத்தை வலம் வரும்போது – விஸ்வநாதரும் மீனாட்சியும் தன் மகனுக்குக் காவலாகத் தனி சன்னிதியில் உள்ளனர். விநாயகர், தட்சிணா மூர்த்தி பின்புறம் நாக வடிவங்கள் உள்ளன. கால பைரவரும், நவக்கிரகங்களும் காட்சி தருகின்றனர்.
அழகனின் வாகனமான மயிலினைக் கடந்து உள்ளே சென்றால் மூலவராக ஆறுமுகப் பெருமான் அழகிய தோற்றத்தில் கருணை வழியும் கண்களோடு பேரருள் பொழிகின்றார். இச்சாசக்தி, கிரியா சக்தியான வள்ளி நாயகியும், தெய்வானையும் இருபுறமும் இருக்க, ஞானசக்தியான வேலினை கரத்தில் ஏந்தியுள்ளார்.
பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபெருமான் கொய்து விட்டதனால், நாரதர் சிவனிடம் வந்து ‘பிரம்மாவின் தலையொன்றைக் கிள்ளி எடுத்தது நான்முகனாக்கியது தவறு’ என்று வாதிட்டு, சிவபிரானின் கோபப் பார்வைக்கு ஆளானார்.
அதனால் நாரதரின் கையில் இருக்கும் மகதி எனும் வீணை வளைந்து விட்டது. சிவ அபசாரம் செய்ததற்காக நாரத முனிவர், சிவக் குமரன் முருகனை இத்தலத்தில் வணங்கி உபதேசம் பெற்று விமோசனம் அடைந்தார். அதன் நினைவாக வளைந்த வீணையுடன் இருக்கும் நாரதரின் உற்சவமூர்த்தம் இத்திருக்கோவிலில் உள்ளது.
திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது நாரதரும் உலா வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இத்திருக்கோவிலில் மற்ற முருகன் கோவில்களைப் போலவே ஐப்பசி மாத வைகாசி விசாகம் விழா 10 நாட்களும், கந்தசஷ்டி உற்சவமும், தைப்பூசம் திருவிழா 10 நாட்களும் நடைபெறுகின்றன. நாக தீர்த்தத்தின் நடுவே நாகப்பிரதிஷ்டை உள்ளது.
பிரார்த்தனைத் தலம் :
குழந்தைச்செல்வம் இல்லாதவர்கள் இத்திருக்கோவில் சண்முகநாதனை பிரார்த்தித்துக் கொண்டால் குழந்தைப் பேறு கிடைக்கிறது. அக்குழந்தையை இக்கோவிலுக்கு கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்கிறார்கள். பின்னர் தவிடு கொடுத்து, அதற்கு பதிலாக அந்தக் குழந்தையை தத்து எடுத்துச் செல்கிறார்கள்.
தலைமுடி காணிக்கை செலுத்தி, காது குத்தி, அந்தக் குழந்தைக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது இப்பகுதி மக்களின் வழக்கமாக உள்ளது. தீவினை தீரவும், நோயுற்றவர்களின் பிணிதீரவும், மன அமைதி கிடைக்கவும் வேண்டிக் கொள்கிறார்கள். நல்லவை நடந்ததும், அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம், காவடி எடுத்தல் போன்ற பக்திச் செயல்களால் ஆறுமுகனுக்கு அன்பினைக் காணிக்கையாக்குவது அடியவர்களின் வாடிக்கை.
தெற்கு குடகு சாமி என்னும் சதாசிவசாமி, ஆறுமுகச்சாமி, பகடைச்சாமி போன்ற சித்தர்கள் வசித்த, தேவ ரகசியங்கள் நிறைந்த மலை, நாரதரின் தேவகானம் ஒலிக்கும் மலை, மயில்கள் தோகை விரித்தாடும் இயற்கை சிரிக்கும் விராலிமலை முருகனின் தலங்களில் முக்கியமானது.
பல காலம் முன்பு இம்மலைக் கோவிலில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதில் பணியாற்ற வேண்டி, கருப்பமுத்து என்னும் அன்பர், தனது இருப்பிடத்திலிருந்து ஆற்றைக்கடந்து கோவிலுக்கு வரமுற்பட்டார். அப்போது ஆற்றில் வெள்ளம் பொங்கி வந்து கொண்டிருந்தது. மழைக்காலமாக இருந்ததால் குளிர் காற்று கருப்பமுத்துவின் உடலை துளைத்தது.
ஆற்றைக் கடந்து கோவிலுக்குச் சென்று பணியாற்ற முடியவில்லையே என்ற மனக் கவலையுடன், குளிரால் நடுங்கிய உடலுடன் இருந்த கருப்பமுத்து, சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வழிப்போக்கன் போல வந்த ஒருவர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார்.
‘உனக்கும் குளிருமல்லவா?, இந்தா இந்த சுருட்டைப் பிடி’ என்று உதவி செய்த வழிப்போக்கனுக்கு, சுருட்டைக் கொடுத்தார். பின்னர் அந்த வழிப்போக்கன் மறைந்து விட்டார். கோவிலுக்கு சிறிது நேரத்தில் வந்து வேலைகளைச் செய்ய ஆயத்தமான கருப்பமுத்து முருகன் சன்னிதியில் சுருட்டு இருப்பதையும் பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்து, ‘ஆற்றைக் கடக்க உதவி செய்த வழிபோக்கன் ஆறுமுகப் பெருமானே’ என்று உணர்ந்து, அன்பு மேலீட்டால் அழுது புரண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அன்பின் வெளிப்பாடாக, அன்பன் ஒருவன் தந்தது அற்பச் சுருட்டு என்றாலும், அதை ஆண்டவன் ஏற்றுக் கொண்டது கருணைக்கு கட்டியம் கூறுவதல்லவா? அதனால் அன்று முதல், விராலி மலை வேலவனுக்கு தினமும் சாயரட்சை வேளையில் சுருட்டு படைக்கப்பட்டு வருகிறது. அதனைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்லும் பக்தர் களின் வயிற்று வலி போன்ற நோய்கள் நீங்குவதாகச் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment