24 October 2014

கிருஷ்ணர் ஸ்தலங்கள்

கிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை வழிபடுவது நல்லது. அதற்கு உதவும் வகையில் பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய குறிப்புகளை இங்கு தருகிறோம். பத்திரப்படுத்தி கொண்டு, நேரம் கிடைக்கும் போது பயன்படுத்துங்கள்.... 

1. திருக்கோவிலூர் :

ஆதிகாலத்தில் இந்த தலம் மலையமான் நாடு என்று அழைக்கப்பட்டது. கிருஷ்ண பரமாத்மா செய்த அற்புதத்தால் பிறகு இத்தலம் கிருஷ்ணன் கோவில் என்று பெயர் பெற்றது. விழுப்புரம் - காட்பாடி சாலையில் திருக்கோவிலூர் உள்ளது. மகாபலி, மிருகண்டு முனிவர், பிரம்மன், இந்திரன், சனகர், சாச்யபர், காலவரி, குஷ்வஜன் ஆகியோர் இத்தலத்தில் பெருமாளை நேரில் கண்டு தரிசனம் செய்துள்ளனர். 



பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் கடைக்கழியில் சந்தித்து பெருமாளை வணங்கி ஒப்பற்ற திருவந்தாதிகளை பாடிய தலம். இத்தலத்து மூலவர் திருவிக்கிரமன். மிருகண்டு முனிவர் கேட்டுக் கொண்டதால் பெருமாள் வாமன அவதாரம் எடுத்து காட்டினார். அவர் சங்கை வலது பக்கமும், சக்கரத்தை இடது பக்கமும் மாற்றி வைத்துள்ளார். 

உற்சவர் கோபாலன். அவர் சீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணர் தினமும் இத்தலத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்வதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன் முதலாக இத்தலத்தில்தான் பாடப்பெற்றது. 

இவ்வளவு பெருமைமிகு இத்தலத்தில் திருவிக்கிரமரையும், கிருஷ்ணரையும் வழிபட்டால், எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, அவற்றை கிருஷ்ண பரமாத்மா பனி கட்டியை உருக வைப்பது போல் தீர்த்து விடுவார். குறிப்பாக கடன் தொல்லை, குடும்ப பிரச்சினை, எதிரிகள் தொல்லை, உறவினர்களின் துரோகம் போன்ற பிரச்சினைகள் கிருஷ்ணரின் அருளால் தீரும். 


2. திருக்கண்ணபுரம் : 
திருக்கண்ணபுரம்
நன்னிலத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலை மேலை வீடு என்றும் திருக்கண்ணபுரத்தை கீழை வீடு என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு இத்தலம் புண்ணியம் மிகுந்தது. மூலவர் ஸ்ரீநீலமேக பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். 


சோழ மன்னர் ஒருவர், ஒரு நாள் இந்த பெருமாளுக்கு சூட்டிய மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அர்ச்சகரிடம் கேட்க அவரும், இது பெருமாளின் தலைமுடிதான் என்றார். சந்தேகம் அடைந்த அரசன், கருவறைக்குள் சென்று பெருமாளின் தலைமுடியை இழுத்துப் பார்த்தான். அப்போது பெருமாள் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. 

அரசன் அதிர்ச்சி அடைந்து மன்னிப்பு கேட்டான். அன்று முதல் இத்தலத்து பெருமாள் சவுரிராஜன் என்று அழைக்கப்பட்டார். தினமும் அர்த்தசாமத்தில் இத்தலத்து பெருமாளுக்கு "முனியோதரம் பொங்கல்'' சமர்ப்பிக்கப்படுகிறது. இவரை வழிபட சூழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி விடுதலை கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கினால் வாழ்வில் இடர்பாடுகள் நீங்கி சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். 

3. திருக்கண்ணங்குடி : 

கிருஷ்ண பரமாத்மாவின் விளையாட்டு நடந்த தலங்களுள் திருக்கண்ணங் குடியும் ஒன்றாகும். திருவாரூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம் பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டது. ஒரு தடவை வசிஷ்டர், வெண்ணையை கிருஷ்ணராக பிடித்து, அதுஇளகாதபடி வைத்து வணங்கிக் கொண்டிருந்தார். 




இதை கண்டு மனம் மகிழ்ந்த கிருஷ்ணர், குழந்தை வடிவம் எடுத்து வந்து அந்த வெண்ணையை தின்று விட்டார். இதை கண்டு பதறிப்போன வசிஷ்டர், குழந்தை கிருஷ்ணரை விரட்டினார். உடனே குழந்தை கிருஷ்ணர் ஓடி சென்று இந்த கோவிலில் உள்ள மகிழ மரத்தடியில் பதுங்கினார். 

அந்த மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள், கிருஷ்ணனை யார் என்று தெரியாமல் பிடித்து கட்டி போட்டனர். இதனால்தான் இந்த ஊருக்கு திருக்கண்ணங்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு நடக்கும் விழாக்களில் பெருமாள் திருநீர் அணிந்து காட்சியளிப்பது ஆச்சரியமானதாகும். 

இத்தலத்தில் மூலவரும், உற்சவரும் ஒரே மாதிரி காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சென்று வழிபட்டால் பரம்பரை சொத்துக்கள் நம் கையை விட்டு போகாது. ஒருவேளை போய் இருந்தால் திரும்ப கிடைத்து விடும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவர்களின் குறைகளை இத்தலத்து பெருமாள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். 

4. திருக்கண்ணமங்கை : 

மிகவும் புகழ் பெற்ற இத்தலம் கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ளது. இத்தலத்தில் பிரார்த்தனை செய்தாலே முக்தி கிடைத்து விடும் என்கிறார்கள். பெருமாள் பாற்கடலை கடைந்தபோது சந்திரன், காமதேனு என வரிசையாக தோன்றி இறுதியில் மகாலட்சுமி அவதரித்தாள். 



பெருமாளை கண்டு வெட்கப்பட்ட லட்சுமி, இந்த திருக்கண்ண மங்கை தலத்துக்கு வந்து தவம் இருந்து பெருமாளுடன் சேர்ந்தாள். இதனால் இத்தலம் கிருஷ்ண மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் விமானம், மண்டலம், அரண்யம், சரஸ், சேத்திரம், ஆறு, நகரம் ஆகிய 7 அம்சங்களும் உள்ளதால் இத்தலம் சப்த அமிந்த சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் குரு வரும்போது இந்த தலத்தில் பெருமாள் 5 தேவியர்களுடன் காட்சி கொடுப்பார். அதை கண்டு தரிசனம் செய்வது மகாமகம் புனித குளத்தில் நீராடியதற்கு சமமாக கருதப்படுகிறது. 

பதவி உயர்வு பெற விரும்புபவர்கள், நினைத்ததை சாதிக்க ஆசைப்படுபவர்கள், இங்கு வழிபட பலன் கிடைக்கும். உறவினர்களால் கெட்ட பெயர் வராமல் இருக்க இத்தலத்து கிருஷ்ணர் வழிகாட்டியாக உள்ளார். 

5. கபிஸ்தலம்  : 

கும்பகோணம் - திருவையாறு பாதையில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கபிஸ்தலம் உள்ளது. பெருமாளின் விளையாட்டுகளில் மிகவும் முக்கியமாக நமக்கு கஜேந்திர மோட்சம் நினைவுக்கு வரும். அது நடந்த இடம் இத்தலம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 



வாலிக்கு பெருமாள் நேரடியாக காட்சிக் கொடுத்த இடம் என்பதால் இந்த ஊருக்கு கபிஸ்தலம் என்ற பெயர் ஏற்பட்டது. திருமழிசை ஆழ்வார் இங்கு மங்களாசனம் செய்துள்ளார். அவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை, ஆற்றங்கரையில் கிடக்கும் கண்ணன் என்று சொல்லி வணங்கினார். 

எனவே பக்தர்களும் அதுபோல் வழிபட வாழ்வில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் தொடர்ந்து வறுமையில் இருப்பவர்கள், தொழிலில் லாபம் பெற முடியாதவர்கள், நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்து கண்ணனை வழிபட நினைத்தது நடைபெறும். 

இத்தலத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபட்டால், பகவான் கருடன் மூலம் பறந்து வந்து நம் கஷ்டங்களை போக்குவார் என்று தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Posts with Thumbnails