சுந்தரேஸ்வரர் கோவில் |
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 49–வது தலமாக விளங்குகிறது. மகாபாரத போரின் போது பாண்டவர்களும், கவுரவர்களும் சரி நிகரான நிலையில் இருந்தனர். பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அர்ச்சுனனிடம் ஒரு யோசனை கூறினார் வேதவியாசர்.
அதாவது, சிவபெருமானை வணங்கி பாசுபத அஸ்திரத்தை பெற்றால், குருசேத்திரப் போரில் கவுரவர்களை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்பதே அந்த யோசனை. இதையடுத்து அர்ச்சுனன் புன்னை மரங்கள் சூழ்ந்திருந்த புன்னகவனத்திற்கு வந்து, சிவபெருமானை வேண்டி தவம் இருந்தான்.
அவரது தவத்தைக் கலைப்பதற்காக முகாசுரன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பினான். அந்த முகாசுரன், பன்றியின் உருவம் கொண்டு அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க முயன்றான். அப்போது ஏற்பட்ட மோதலில் பன்றி உருவத்தில் இருந்த அசுரனை, அர்ச்சுனன் அம்பு எய்து வீழ்த்தினான்.
அப்போது ஒரு வேடன் தன் மனைவி மற்றும் மகனுடன் அங்கு வந்து, ‘பன்றியை நான்தான் வீழ்த்தினேன்’ என்றார். மேலும் பன்றியையும் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அர்ச்சுனன் அதனை தடுத்தான். பன்றியை அம்பு எய்து வீழ்த்தியவன் நான் என்று கூறினான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது வேடன் உருவில் வந்த சிவபெருமான், சுய உரு கொண்டு தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு உணர்த்தினார். பின்னர் அர்ச்சுனன் தவமிருந்து தன்னிடம் வேண்டிய பாசுபத அஸ்திரத்தை கொடுக்க முயன்றபோது, சிவபெருமானை பார்வதிதேவி தடுத்து நிறுத்தினார்.
‘இறைவா! ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவன் தானா?’ என்று தயக்கத்துடன் கேட்டாள் அன்னை. சிவபெருமான் அம்பிகையிடம், ‘அர்ச்சுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன்.
எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்’ என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிவாக நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பிறகு அம்பாள் சம்மதிக்கவே, சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல, இவ்விடத்தில் இருந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினான்.
ஈசனும் அவ்வாறே அருள் புரிந்தார். இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரு முறை கயிலாயத்தில் பார்வதிதேவி, சிவபெருமானிடம் வாதத்தில் ஈடுபட்டார். ‘சுவாமி! உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்?. நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!’ என்றாள்.
அன்னையின் பேச்சில் இருந்த ஆணவத்தை அறிந்த ஈசன், அவளை பூலோகத்தில் மீனவப் பெண்ணாக பிறக்கும்படி செய்தார். அதன்படி அம்பாள், இத்தலத்தில் மீனவப் பெண்ணாக பிறந்தாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஈசன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள்.
சிவபெருமானும் மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இந்த ஆலயத்தில் நடைபெறும் மாசித் திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று ‘மாப்பிள்ளை அழைப்பு’ கொடுக்கின்றனர். அப்போது மீனவர்கள் சிவனை, ‘மாப்பிள்ளை’ என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது.
திருமண தோஷம் விலக :
இத்தலத்தில் சிவபெருமானிடமும் அம்பாளிடமும் வேண்டிக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கும். விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார்.
உற்சவர் சிவபெருமான், கையில் சூலம், வில்லை ஏந்திய நிலையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி வேடமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவரின் அருகில் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ச்சுனனும், அம்பாள் தலையில் பானையுடனும் வீற்றிருக்கும் காட்சி விசேஷமானதாகும்.
திருவிழாக் காலங்களில் அர்ச்சுனன், உற்சவருக்கும் சேர்த்தே பூஜைகள் நடைபெறுகின்றன. அம்பாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சாந்தமான கோலத்தில் இருப்பதால், அன்னையை ‘சாந்தநாயகி’ என்று அழைக்கின்றனர்.
பிரச்சினைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள், இந்த அன்னைக்கு வஸ்திரதம் சாத்தி, பூஜைகள் செய்து வணங்கினால் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. திருஞானசம்பந்தர் காரைக்கால் செல்லும் முன்பாக, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்துள்ளார்.
அப்போது படகில் இருந்து இறங்க முயன்றபோது கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே அவர் கடலில் நின்றே, இத்தல இறைவனைப் பற்றி பதிகம் பாடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
கோவில் உள்தோற்றம்:
சிவபெருமான் வேடன் வடிவில் வந்ததால், இந்த ஊர் ‘வேட்டக்குடி’ என்றும், அம்பாள் மீனவப் பெண்ணாக பிறந்த தலம் என்பதால் ‘அம்பிகாபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் விநாயகர், சுந்தர விநாயகர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஐந்து நிலைகளுடன் கூடிய இக்கோவிலின் ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கிறது. சிவபெருமான் வேடனாக வந்தபோது, முருகப்பெருமானையும் அழைத்து வந்தாராம்.
எனவே இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானும், ஈசனைப் போலவே வில்லை ஏந்தியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமானும், முருகப்பெருமானும் வில் ஏந்திய நிலையில் ஒரே கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். மாசி மகத்தில் 3 நாட்கள் திருவிழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்றவை விசேஷமாக நடைபெறுகின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் திருவேட்டக்குடி திருத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.
No comments:
Post a Comment