04 July 2014

திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோவில்


திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோவில்
பக்தவச்சலப் பெருமாள் கோவில்
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வரவில்லையா? எத்தனையோ தொழில்களை மாற்றி, மாற்றி செய்தாலும் எதுவும் வெற்றிகரமாக அமையவில்லையா? கவலையேப் படாதீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் சென்னை பட்டாபிராமை அடுத்துள்ள திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் ஆலயமாகும். 

தின்னனூர் என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில் புகழ் பெற்ற சிவாலயமான இருதயாலீஸ்வரர் கோவில் அருகில் இத்தலம் உள்ளது. மகாலட்சுமிக்கு "திரு'' என்றும் ஒரு பெயர் உண்டு. மகாலட்சுமி சில காலம் இந்த ஊரில் வந்து தங்கி இருந்ததால், அதை உணர்த்தும் வகையில் இந்த ஊருக்கு "திருநின்றவூர்'' என்ற பெயர் ஏற்பட்டது. 

இதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:- 

ஒரு சமயம் பெருமாளுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே சிறு ஊடல் ஏற்பட்டது. கோபம் கொண்ட மகாலட்சுமி பாற்கடலை விட்டு விலகி பூமிக்கு வந்தாள். நேராக அவள் இத்தலம் உள்ள ஊருக்கு வந்து தங்கினாள். இதற்கிடையே மகளை (மகாலட்சுமியை) காணாத சமுத்திராஜன், அவளை பல இடங்களில் தேடினார். 

கடைசியில் இங்கு வந்து மகாலட்சுமியை கண்டார். மகளைக் கண்ட மகிழ்ச்சியில் "என்னைப் பெற்றத் தாயே'' என்று அழைத்தார். பிறகு பாற்கடலுக்கு திரும்பி வர கூறினார். ஆனால் மகாலட்சுமி அதை ஏற்கவில்லை. இதனால் திரும்பிச் சென்ற சமுத்திரராஜன் நடந்ததையெல்லாம் பெருமாளிடம் கூறினார். 

''பகவானே தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்'' என்றார். அதற்கு பெருமாள், "நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் வருகிறேன்'' என்றார். அதன்படி பெருமாள் வந்து மகாலட்சுமியை அழைத்தார். சமாதானம் அடைந்த மகாலட்சுமி மீண்டும் பெருமாளுடன் பாற்கடலில் வாசம் செய்தாள். 

இதனால் பாற்கடல் மீண்டும் புதுப்பொலிவைப் பெற்றது. மகாலட்சுமி சில காலம் தங்கி இருந்த தலம் என்பதால் இத்தலத்துக்கு திருநின்றவூர் என்ற பெயர் ஏற்பட்டது. மகாலட்சுமி இத்தலத்தில் எழுந்தருளி இருந்த சமயத்தில் ஒரு அற்புதம் நடந்தது. ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் மூலம் அந்த அற்புதம் நடந்தது. 

ஒரு தடவை திருமங்கை ஆழ்வார் திவ்ய தேசங்களை கண்டு வழிபட்டும், பாசுரங்கள் பாடியும் வழிபட்டு வந்தார். திருவள்ளூர் கோவிலுக்கு சென்று விட்டு திருநின்றவூர் தலத்துக்கு வந்தார். அந்த சமயம் நடை சாத்தப்பட்டு விட்டது. பெருமாள் ஏகாந்த நிலைக்கு சென்று விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த திருமங்கை ஆழ்வார் அத்தலத்தில் எந்த பாசுரமும் பாடாமல் புறப்பட்டு சென்று விட்டார். 

இதை அறிந்த திருமகள் மகாலட்சுமி மிகுந்த வருத்தம் அடைந்தாள். அவள் பெருமாளிடம், "எப்படியாவது திருமங்கை ஆழ்வாரை இத்தலம் மீதான பாசுரத்தை பாட செய்யுங்கள்'' என்றாள். உடனே பெருமாள், திருமங்கை ஆழ்வாரை தேடிச் சென்றார். அதற்குள் திருமங்கை ஆழ்வார் மாமல்லபுரம் தலத்துக்கு வந்திருந்தார். 

அவரை அணுகிய பெருமாள், தான் வந்திருக்கும் நோக்கத்தை சூசகமாக உணர்த்தினார். பூரித்துப் போன திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் பக்தவச்சலம் மீது ஒரு பாசுரம் பாடினார். பாசுரத்துடன் திருநின்றவூர் திரும்பிய பெருமாள் அதை மகாலட்சுமியிடம் கொடுத்தார். 

அதை பார்த்த மகாலட்சுமி, "எல்லா திவ்யதேசங்களுக்கும் 10-க்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடியுள்ள ஆழ்வார் நமக்கு மட்டும் ஏன் ஒரே ஒரு பாசுரம் பாடியுள்ளார். அவரிடம் இன்னும் பாசுரங்கள் பெற்று வாருங்கள்'' என்றாள். கடவுளாகவே இருந்தாலும் மனைவி சொன்ன பிறகு தட்டவா முடியும்? உடனே பெருமாள், திருமங்கையாழ்வாரை தேடிப் புறப்பட்டார். 

அதற்குள் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ண மங்கை தலத்துக்கு சென்று விட்டார். அங்கு அவரிடம் தோன்றிய பெருமாள், தன் வருகை நோக்கத்தை உணர்த்தினார். நெகிழ்ந்து போன திருமங்கை ஆழ்வார் உடனே மீண்டும் ஒரு பாசுரம் பாடி கொடுத்தார். இதனால் பெருமாளும், மகாலட்சுமியும் மகிழ்ச்சி கொண்டனர். 

இந்த சம்பவத்தால்தான் இத்தலத்து பெருமாளுக்கு பக்தவச்சலம் என்ற பெயர் ஏற்பட்டது. வச்சலம், வாத்சல்யம் என்றால் அன்பும், பாசமும் கொண்டவர் என்று அர்த்தம். பக்தனிடம் அன்பு கொண்டவர் என்பதுதான் "பக்தவச்சலம்'' ஆனது. சுத்த தமிழில் பத்தராவிப் பெருமாள் என்பார்கள். ஆனால் பக்தனை தேடி சென்றவர் என்பதால் பக்தவச்சலப் பெருமாள் என்றே பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். 

இத்தலம் பற்றியும் திருநின்றவூர் பெயர் பற்றியும் நாரதர் பிருகு மகரிஷியிடம் கூறியது, பிரம்மாண்ட புராணத்தில் 17, 18, 19-ம் அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையானது என்பதை உணரலாம். தல புராணங்களில் இத்தலத்தை கட்டியவர்கள் பற்றி எந்த குறிப்பும் இல்லை. 

என்றாலும் கி.பி. 690 முதல் 728 வரை 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். பல மன்னர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தின் ராஜகோபுரம் விஜய நகர காலத்தில் கட்டப்பட்டது. 

அதை வணங்கி பலி பீடம், கருட சன்னதி, மகாமண்டபம், உள் மண்டபம் தாண்டிச் சென்றால், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பஞ்சாயுதம் தாங்கி நின்ற கோலத்தில் உள்ளதை காணலாம். 

11 அடி உயரத்தில் கிழக்கு பார்த்து சங்கு, சக்கரம் ஏந்தி காட்சித் தரும் அவர் நாம் விரும்புவதை எல்லாம் தரும் மிகச் சிறந்த வரப்பிரசாதி ஆவார். சூரிய வம்சத்து மன்னனான தர்மத்துவஜன் நாட்டை பகைவர்களிடம் இழந்து தவித்தான். பக்தவச்சலப் பெருமாளின் அருளை அறிந்த அவன், இத்தலத்துக்கு வந்து வருண குளத்தில் பங்குனி மாதம், திருவோண (கிருஷ்ணபட்சம்) நாளன்று நீராடி வழிபட்டான். 

இதனால் இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். இப்படி ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ள பக்தவச்சலப் பெருமாளை வழிபட்ட பிறகு பிரசாரம் சுற்றி வந்து, பெருமாளின் வலது புறத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தாயாரை வணங்க வேண்டும். இந்த தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு. 

இந்த தாயார் முகத்தில் பக்தர்களை காத்து அருளும் கருணை நிரம்பி இருப்பதை காணலாம். குபேரன் தன் நிதியை இழந்து வாடிய போது என்னை பெற்ற தாயாரை வணங்கி மீண்டும் நிதி பெற்றான் என்று புராணம் சொல்கிறது. இங்கு மகாலட்சுமி சகல சவுபாக்கியங்களும் தரும் வைபவ லட்சுமியாக திகழ்கிறாள். 

சுற்றுப் பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரிகாத்த ராமர், ஆதிசேஷன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலவர் பெயர் பத்தராவிப் பெருமாள். தல விருட்சம் பாரிஜாதம். இத்தலத்தில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினசரி பூஜைகள் நடக்கிறது. ஆலயத்தை சுத்தமாக பராமரிப்பதை பாராட்டலாம். 

108 திவ்ய தேசங்கள் வரிசையில் இத்தலம் 58-வது தலமாகத் திகழ்கிறது. இத்தலம் பற்றி ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில் 742-வது வரியில், "தன்னை சரண் அடைந்தவர்களுக்கு அருள்வதில் பக்தவச்சலன், தாய்ப்பசுவின் தன்மை கொண்டவன்'' என்று கூறப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமுத்திரராஜன், வருணன் இருவரும் இத்தலத்தில் பெருமாளின் தரிசனம் பெற்றனர். 

பக்தர்களும் அத்தகைய தரிசன அருளைப் பெற வேண்டுமானால் பக்தவச்சலப் பெருமாளை பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபடலாம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட தடை நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஆதிசேஷன் சன்னதியில் புதன்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, பால் பாயாசம் படைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு - கேது மற்றும் சர்ப்பதோஷம் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் வியாபாரம் செழிக்கும். வியாபாரம் லாபம் தருவதாக மாறும்.

நஷ்டம் தந்து கொண்டிருக்கும் வியாபாரம் லாபத்துக்கு மாறும். அது மட்டுமல்ல பக்தவச்சலப் பெருமாளை வழிபடுபவர்களுக்கு இழந்த சொத்து திரும்ப கிடைக்கும். காணாமல் போன பொருட்கள் திரும்ப வரும். இழந்த பதவியை பெறலாம். அதோட பதவி உயர்வும் தேடி வரும். 

தின்னனூர் வந்து பக்தவச்சலப் பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து வாருங்கள், விரைவில் நல்ல பலன்களை பெறுவீர்கள். ஆனி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தன்று (7.7.14) நடக்கும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று பக்தவச்சலப் பெருமாளை தரிசித்தால் மனம் குளிரும் வண்ணம் நல்லவை நடைபெறும்.

No comments:

Related Posts with Thumbnails