Showing posts with label முருகப்பெருமான். Show all posts
Showing posts with label முருகப்பெருமான். Show all posts

19 January 2011

தைப்பூசம்




" வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உய்வோம்! "


நாளை தினம் தைப்பூசம் [20-01-2011].  இந்த நாளின் மகிமையைப் பற்றி இதோ உங்களுக்காக:

முருகப்பெருமான்

முருகன் கோவில்களில் மிகவும் முக்கியமான விழாக்களில் முதன்மையான தைப்பூசத் திருவிழா. குறிப்பாக பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவிலில், தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெறும்.


பக்தர்கள் பாதயாத்திரை
பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபடுவார்கள். பல்வேறு வகையான காவடிகளை ஏந்தியபடி லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.

முருகப் பெருமான்
தைப்பூசம் என்பது சைவ சமயத்த்வர்களால் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில்  பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும்.  உகந்த முருகனுக்கு நாள் தைப்பூச தினம் என்பர்.

தைபூசத்தின் மகிமை
தம்பதியர் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகக் கொண்டாடப்படும் விழா தைப்பூசத்திருநாள். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து நடனமாடுவார் சிவபெருமான். நடன நிலையிலுள்ள சிவனை, “நடராஜர்’ என்று அழைக்கிறோம். தைப்பூசத் திருநாளில் அவர் உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். சிவனின் இந்த நிலையை, “உமா மகேஸ்வரர்’ என்பர். அவன் அசைந்தால் தான் உலகம் அசையுமென்ற நியதியை எடுத்துச் சொல்வதே நடன தத்துவம். ஐந்துவித தொழில்களை நடத்துகிறான் இறைவன். அவை: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். இதன் மூலம் அவன் உலக உயிர்களுக்கு சொல்வதைக் கேளுங்கள்.

வேல் முருகா
“உயிர்களே… நான் ஆடுகிறேன் என்றால், நீங்களும் ஆடுகிறீர்கள். இந்த ஆட்டத்தின் போது உங்களை நான் படைக்கிறேன். படைத்த உங்களைக் காப்பதற்காக எல்லா வசதிகளையும் இந்த உலகத்தில் தந்துள்ளேன். உங்கள் வாழ்வை முடிப்பவனும் நானே. முற்பிறவியில் நீங்கள் செய்த செயல்களை மறைத்து, அதற்குரிய பலனை மட்டும் அனுபவிக்கச் செய்யும் மறைத்தல் (மறக்கச் செய்தல்) தொழிலைச் செய்கிறேன். உங்களை பிறவியில்லா நிலைக்கு ஆளாக்கி, என்னுடன் கலக்க அருளுகிறேன். இவற்றையே நான் துணைவியுடன் இணைந்தாடும் ஆட்டத்தில் வெளிப்படுத்துகிறேன்…’ என்கிறான். இந்த உலகத்தை இறைவனும், இறைவியும் சேர்ந்து இயக்குகின்றனர் என்பதையும் இந்த நாட்டியம் உணர்த்துகிறது. உலகத்தை இயக்க எப்படி இந்த தம்பதியர் இணைந்திருக்கின்றனரோ, அதுபோல ஆணும், பெண்ணும், பிற உயிர்களும், தங்கள் குடும்பத்தை இயக்க தம் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கருத்தொருமித்து செயல்பட்டால், வாழ்க்கை வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்; குடும்பம் நல்ல முறையில் இயங்கும் என்பதையும் இது வெளிக்காட்டுகிறது.

வேல்
உயிர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த நடனத்தை தன் தேவியுடன் இணைந்து நடத்த அவன் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் பூசம். பூசம் ஒரு உயர்ந்த நட்சத்திரம். தை மாதம், சூரியன் மகர வீட்டிலும், தைப்பூச நாளில் அவருக்குரிய சொந்த வீடான கடகராசியிலும் சஞ்சரிக்கிறார். அப்போது சூரியனின் ஏழாம் பார்வை சந்திரன் (கடகம்)வீட்டிலும், சந்திரனின் ஏழாம் பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்தநிலை.

சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. எனவே, இதை வழிபாட்டுக்குரிய நாளாக தேர்வு செய்தனர். மேலும், சூரியன் சிவாம்சம்; சந்திரன் சக்தியின் அம்சம். எனவே தான் இருவரும் இணைந்து நடனமாடுவதாக ஐதீகம். இந்நாளில் சிவாலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. குறிப்பாக, தீர்த்தங்கள், ஆறுகளில் நீராடி சிவவழிபாடு செய்யும் தலங்களில் அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டால் விரும்பியவை நடக்கும் என்பது ஐதீகம்.

வள்ளி-தேய்வானையுடன் முருகப்பெருமான்
முருகப்பெருமானுக்கும் பூசம் உகந்தது. அவர் பூச நட்சத்திரத்தில் தான் வள்ளியை மணந்து கொண்டார். இந்நாளில் முருகனுக்கு காவடி எடுப்பதுண்டு. அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான். “மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்…’ என்பதே காவடி தத்துவம். இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பர்.
தைப்பூசம் நன்னாளில் தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன் கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி வருவது நல்லது. 

ஓம் சரவண பவ 


சிறப்புகள்

  • தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
  • சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
  • சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
  • தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
  • வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் சமாதியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச விரத முறை 


விரத முறை 



காவடி
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு , உருத்திராட்சம்  அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம் , திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால் , பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச்   சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.

காவடி
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண  மக்கள் புது நெல்லு[(புதிர்] எடுப்பர். தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அருவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம்  என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.



 பால் குடம் 
அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து  உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும். ஊரில் உள்ள முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.


பழனியில் தைப்பூசம்

பழனி கோயில் தைப்பூச திருவிழா தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வருவர். பழநியில் 10- நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் தைப்பூசம் ஜனவரி 14ல் தொடங்குகியது.  

பழனியில் தைப்பூசம்
ஜனவரி 23-ம் தேதியன்று காலை 8.30 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் அன்று மாலை 5.30 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடக்கிறது. இதனை தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு மேல் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்திருவிழா நாட்களில் மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

பழனி தைப்பூச திருவிழாவுக்கு மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க மதுரை அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து உள்ளது. 
" வேல் வேல் வெற்றி வேல் "

Related Posts with Thumbnails