Showing posts with label Revathi. Show all posts
Showing posts with label Revathi. Show all posts
21 October 2010
27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - [ ரேவதி - Revathi]
ஸ்தல வரலாறு:
சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதிநட்சத்திரத் தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்கு மென நம்புகிறார்கள். விவசாயிகளுக்குரிய கோயிலாக இது விளங்குகிறது.
சிறப்பம்சம்:
சந்திரனுக்கும், ரேவதிக்கும் சிவபார்வதியும் காட்சி கொடுத்ததால், இது ரேவதி நட்சத்திர தலமாக விளங்குகிறது. ரேவதி, தினமும் அரூப வடிவில் (மற்றவர் கண்களுக்கு தெரியாமல்) இங்கு வந்து பூஜை செய்கிறாள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரநாளில், இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியாக ( 27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள்) சிவனுககும், அம்பாளுக்கும் பொருட்களை சமர்ப் பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடைபட்ட செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது, சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள்.
நோய் தீர்க்கும் தலம்:
காசிக்கு அடுத்து காருகுடி என்ற சுலவடை இந்தப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. அதாவது, காசிக்கு இணையான தலம் என இதனைப் போற்றுகின்றனர். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்தல இறைவனை வணங்கி கோயிலை பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும். நீர், கண்சம்பந்தப்பட்ட நோய், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது.
கோயில் அமைப்பு:
1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதுப்பித்துக் கட்டியுள்ளான். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
ரேவதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:
மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர்.
பிரதான தேவதை[Pradhana Devatha] : சூரியன் [Surya/Sun]
அதி தேவதை [Ati Devatha] : சனி [ Saturn]
இருப்பிடம்:
திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்.
திறக்கும் நேரம் : காலை 6- 11 மணி, மாலை 5- இரவு 8 மணி.
போன்:+91 -97518 94339,94423 58146.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கோயில் இருப்பதால், குருக்களுக்கு போன் செய்து விட்டு வருவது நல்லது.
Subscribe to:
Posts (Atom)