Showing posts with label வைகுண்ட ஏகாதசி. Show all posts
Showing posts with label வைகுண்ட ஏகாதசி. Show all posts

17 December 2010

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு

இன்று தினம் [17-12-2010] , வைகுண்ட ஏகாதசி கொண்டாடப் படுகிறது. இந்த நாளின் சிறப்பு அம்சத்தைப் பற்றி அறிந்துக்கொள்வோம்.....



தேவியருடன் ஸ்ரீமாதவபெருமாள்[மயிலை]
ஏகாதசி பிறந்த கதை:

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தான் முரன் என்னும் அசுரன்.  இதனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவப்பெருமானிடம் முறையிட்டனர். அவர்களை, திருமாலிடம் சரண்புகுமாறு அறிவுறுத்தினார் சிவனார்.

அதன்படி, அனைவரும் திருமாலிடம் சென்று வேண்டிக் கொண்டனர்.  அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்ட திருமால், அசுரனுடன் போரிடத் துவங்கினார்.  ஆயிரம் ஆண்டுகள் நீடித்தது இந்த போர்.  முடிவில், போரில் களைப்படைந்தவராக பத்ரிகாஸ்ரமம் - குகைக்கு வந்து ஓய்வெடுத்தார் பெருமாள்.  அங்கேயும் வந்து போருக்கு அழைத்தான் முரன்.  அப்போது, திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது.  இந்த கக்தியை அசுரன் நெருங்கும் வேளை.....அவளிடம் இருந்து வெளிப்பட்ட பெரும் ஓலம், அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

துயில் எழுந்த பெருமாள், "ஏகாதசி" என்று அந்தப் பெண் சக்திக்கு பெயரிட்டார்; "உன்னை வழிப்படுபவர் களுக்கு வைகுண்டம் அளிப்பேன்" என்று வரம் தந்தார்.

இந்த முதல் ஏகாதசி ஆரம்மமானது....மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் [தேய்பிறையில்].  எனவே,
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசியை "வைகுண்ட ஏகாதசி " என்று போற்றுகிறோம்.

ஏகாதசியின் தத்துவம்:

ஏகாதசி என்பதற்கு 11-ஆம் நாள் என்பது பொருள்.  ஞானேந்திரியங்கள் ஐந்து.  கர்மேந்திரியங்கள் ஐந்து.  [வாக்கு, பாதம், பாணி, பாபு, உபத்தம்]. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெரருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே பெருமாளுடன் ஓன்றி உபவாசம் இருப்பதையே ஏகாதசி புண்ணியதினம்  வலியுறுத்துகிறது.



ஸ்ரீவில்லிபுத்தூர்
சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?

ஸ்ரீமகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால், பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது-கடைபவர். இந்த அசுரர்கள், தங்களுக்குக் கிடைத்த வைகுண்டப் பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
என்று விரும்பினர்.

எனவே, "வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் வழியாக அர்ச்சாவதாரத்தில் [உற்சவ மூர்த்தியாக] தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசித்து பின்தொடரும் பக்தர்களது பாவங்களை நீக்கி
முக்தி அளிக்க வேண்டும்" என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர்.  அப்படியே அருள் செய்தார் பெருமாள்.

இதன்பொருட்டே, சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் திருமால்!

விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசி முதல் நாள் தசமி அன்று திருமாலை வணங்கி விரதம் துவங்க வேண்டும்.  அன்று, பகலில் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம்.  ஏகாதசியன்று அதிகாலையில் கண் விழித்து, குளித்து, மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.  பெருமாள் ஆலயங்களில் நடைபெரும் வழிபாட்டு வைபவங்களை தரிசிப்பது சிறப்பு. அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும், பகவான் நாமங்களைச் சொல்வதுமாக
இருக்க வேண்டும்.

ஏகாதசி மறுநாள் - துவாதசி.  அன்று உணவு அருந்துவதை பாரணை என்பர்.  துவாதசி அன்று அதிகாலையில் நீராடி, இறைவனைப் பிரார்த்தித்த பிறகு, உப்பு-புளிப்பு இல்லாத உணவை ஆல்- இலையில் பரிமாறி....சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து....பற்களில் படாமல், " கோவிந்தா  கோவிந்தா" என்று மூன்று முறை கூறி சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.  நாம் சாப்பிடுமுன் பெரியோருக்கும் வறியவருக்கும் உணவு வழங்க வேண்டும்.  துவாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது.  குழந்தைகள்,
வயதானவர்கள் நோயாளிகளுக்கு உணவு விஷயத்தில் விலக்கு என்கிறது சாஸ்திரம்

"வைகுண்ட் ஏகாதசி 2010 " Video இதோ உங்களுக்காக [Courtesy:ShanguChakra]


http://www.youtube.com/watch?v=8eP2X7_RmGI





Related Posts with Thumbnails