18 April 2012

அட்சயதிருதியை சிறப்பு
வைகாசி மாத சுக்கில பட்ச திருதியையே அட்சய திருதியை. இந்த நாளுக்கு உரிய கடவுள் மஹாவிஷ்ணு

மஹாவிஷ்ணு
பரந்தாமன் பரசுராம அவதாரம் எடுத்தது அட்சய திருதியை நாள் ஒன்றில்தான். அட்சயதிருதியை தினம் ஒன்றில்தான் திரேதா யுகம் 
தொடங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.

புண்ணிய நதியான கங்கை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்ததும் இந்நாளில்தான். சமணர்கள், ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு 
நாளாக இதனை அனுசரிக்கின்றனர்.

"அக்ஷ்யம்" எனும் வடமொழிச் சொல்லுக்கு எப்போதும் குறையாதது என்று அர்த்தம்.  

அட்சயதிருதியை தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமன்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல்,
புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.

அட்சய தினத்தன்று ஆலிலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து, தலையணை அடியில் வைத்தால், நோய்களின் கடுமை குறையும்.  
குழந்தைகளீன் படுக்கை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும், பயங்கள் போகும். பூஜை அறையில் அல்லது வியாபார தலத்தில் 
வைத்திருந்தால் எதிரிபயம் விலகும்.


ஸ்ரீ மஹாலக்ஷ்மி
இந்த நாளில், குபேரபூஜை, லக்ஷ்மி நாராயண பூஜை, சிவ பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை போன்றவற்றைச் செய்வது நற்பலங்களைத் தரும்.

அட்சய திருதியை நாளில் இயன்ற அளவில் தானம் செய்வது மிக மிகச் சிறந்தது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள், பல மடங்கு அதிக 
நன்மை தரும்.  
 
பித்ருகளை வணங்கவும், அவர்களுக்கு உரிய நீத்தார் கடங்களை செய்யவும் உருய நாள் இது. இதனால் கிட்டும் முன்னோரின் ஆசி
மூவாயிரம் மடங்கு நற்பலனைத் தரும் என்பது ஐதீகம்.  

எல்லாவற்றையும் விட மிகமிக முக்கியமானது அட்சய திருதியை நாளில் உப்பு வாங்குவதுதான். அட்சய திருதியை நாள் ஒன்றில்தான் 
கடலில் இருந்து மஹாலக்ஷ்மி வெளிப்பட்டாள் என்றும், அந்த சமயத்தில்தான் உப்பும் தோன்றியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன.  
விலை மலிவானதாக இருந்தாலும், உப்பு மஹாலக்ஷ்மியின் அருள் நிறைந்தது. அட்சய திருதியை நாளில் பொன், வெள்ளி, வைரம்,
இதெல்லாம் வாங்கித்தான் ஆகவேண்டும் என்பதில்லை.  

தானதர்மங்கள் செய்தல்


எளிமையானதும் லக்ஷ்மிகரமானதுமாகிய உப்பினை வாங்குங்கள். உங்கள் வசதிக்கு ஏற்றபடி அன்னதானம், ஆடை தானம், கல்வி உதவி, 
மருத்துவ உதவி, என்று ஏதாவது தானம் இயன்ற அளவில் செய்யுங்கள். பார்வதி, குபேரன், என்று உங்கள் மனதிற்குப் பிடித்த கடவுளை
மனதாரத் துதியுங்கள்.

அஷ்டலக்ஷ்மியர் அருளால் உங்கள் வீட்டில் அட்சயமாகச் சேல்வம் வளரும், நிலைக்கும். கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று
பெண்கள் ஒரு கலசம் வைத்து அதில் கௌரியை எழுந்தருளச் செய்து, சொர்ண கௌரி விரதம் கடைப்பிடிக்கின்றனர். இதன் மூலம், 
பார்வதி தேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். மணப்பேறு, மழலை பாக்கியம், சுமங்கலித்தன்மை, குடும்ப ஒற்றுமை, எல்லோரின்
உடல் நலம் ஆகியன வேண்டி அவர்கள் இந்த விரதம் இருக்கிறார்கள். விரத முடிவில் இயன்ற அளவில் தானமும் வழங்குவர்.

அட்சய திருதிய நாளில் புதங்கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு. அப்படி வரும் நாளில் செய்யப்படும்தானதர்மங்கள் பலகோடி மடங்கு பலன் தரும்.  

அட்சய திருதியை விரதத்தினை முதன் முதலில் அனுசரித்தவன் மகோதயன் எனும் வணிகன். வறுமையில் வாடிய அவன் மனைவிதடுத்ததையும் பொருட்படுத்தாமல் அட்சய தினத்தன்று விரதம் இருந்து, தன்னிடம் மீதமிருந்த செல்வத்தையும் தானமாக அளித்தான்.  
அதனால் அவனது தான பலன் பெருகி வளமை சேர்ந்தது. அஷ்டலக்ஷ்மி கடாட்சம் நீங்காமல் நிலைத்தது. மறுபிறவியில் அவன்அரசனாகப் பிறந்து கொடை வள்ளலாகத்திகழ்ந்தான் என்கிறது பவிஷ்ய புராணம்.


1 comment:

இராஜராஜேஸ்வரி said...

அட்சய திருதியை நாளில் இயன்ற அளவில் தானம் செய்வது மிக மிகச் சிறந்தது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள், பல மடங்கு அதிக
நன்மை தரும்.

சிறப்பான தானத்திருநாள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Related Posts with Thumbnails