04 July 2014

திருமண தோஷம் நீக்கும் திருக்கண்டியூர்

பிரம்மசிரகண்டீஸ்வரர் - திருக்கண்டியூர்.
தல வரலாறு : 

ஒரு சமயம் பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார். உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார். அம்பாள், சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு, உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது. தன் தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார். 

சிவனும், பிரம்மாவின் தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிவபெருமான் துண்டித்து பிரம்மதேவரின் தலை, அப்படியே ஈசனின் கையில் ஓட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது.

அற நெறியை உலகத்தவரும் உணர்ந்து கடைபிடிக்குமாறு தாமே அதனை கடைபிடித்து காட்ட சிவபெருமான் எண்ணினார். அதன்படி, பைரவரை பார்த்து இத்தீவினை தீர நீயும் பிச்சை ஏற்க வேண்டும் என்று கூறினார். பைரவர் பல சிவ தலங்களுக்கும் சென்று பிச்சை கேட்டு திரிந்தார். 

கண்டியூருக்கு வந்து இந்தக் திருக்கோவிலை அடைந்தவுடன் அத்தலை, சிவபெருமானின் கையை விட்டு போனது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இதனையடுத்து பிரம்மதேவர் ஆணவமின்றி தன் துணைவியும் தானுமாய் இக்கோவில் இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்பு தொழிலை பெற்றார் என்கிறது தலவரலாறு. 


பிரம்மனுக்கு தனிக் கோவில் : 

ஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார். 

பிரம்மா அன்னப்பறவையாக சென்று சிவபெருமானது முடியை கண்டதாக பொய் கூறிய காரணத்தால் ‘உனக்கு எங்கும் கோவில் இல்லாமல் போகக்கடவாய்’ என்று சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்திற்கு ஏற்ப இங்கு பிரம்மனுக்கும் பெரிய கோவில் இருந்தும், இடிபாடுகளுடன் வழிபாடில்லாது இருப்பது சிவ சாப வன்மை போலும். 

பிரம்மனது கோவிலுக்கு பக்கமே அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.

துவார பாலகர்கள் இல்லை : 

துரோணர் தமக்கு மகப்பேறு இல்லாத குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு எய்தினார். இந்த தலம் அட்ட வீரட்ட தலங்களில் முதல் தலமாகவும், சப்தஸ்தான தலங்களில் 5–வது தலமாகவும் போற்றப்படுகிறது.   எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போல் இத்தலத்தில் துவார பாலகர்கள் இல்லை. 

முருகப்பெருமான் ஞான குருவாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். அர்த்தமண்டப வாசலுக்கு வலது புறத்தில் சப்தஸ்தான தலங்களை குறிக்கும் வகையில் 7 லிங்கங்களும், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் 5 லிங்கங்களும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார். 

மயில் வாகனம் இங்கு இல்லை. நவக்கிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றிருக்கின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்து விட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். 

திருமணம் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிற்றை கட்டி இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம். இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்றனர். 

சூரியன், முனிவர்கள் ஆகியோர் வழிப்பட்ட தலம். சூரியன் வழிபட்டதால் இத்தலத்தில் உள்ள இறைவன் மீது மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளிபடுகின்றது.  

போக்குவரத்து வசதி : 

தஞ்சாவூர் – திருவையாறு செல்லும் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் கண்டியூர் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு செல்ல தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. கும்பகோணம் – திருவையாறு மார்க்கமாகவும் இத்தலத்திற்கு செல்லலாம்.

No comments:

Related Posts with Thumbnails