18 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் -[ பூரம் -Purvaphalguni]


ஸ்தல வரலாறு: 

சோழமன்னன் கல்மாஷபாதனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை
பாக்கியம் இல்லை. சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறை நீங்க, திருவரங்குளம் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறினார். மன்னனும் இத்தலம் வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான். அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவல் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து மன்னன் அங்கு சென்று பூமியில் தோண்டிப்பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது.அவ்விடத்தில் ஒரு லிங்கம் தென் பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்து, அந்த இடத்தில் எழுந்த கோயிலே இது. ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான்.அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சிறப்பம்சம்: 

பூர தீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உண்டு. இந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு வழிபடலாம்.

முக்காடு போட்டு வழிபாடு:

அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியாரின் வம்சத்தில் இத்தல அம்மன் பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்சப் பெண்ணின் மாப்பிள்ளையான சிவனை நினைத்து, முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.

பூரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

 ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப்பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை, நீதி உடையவர்களாக இருப் பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர்.

பிரதான தேவதை[Pradhana Devatha] : சூரியன்[Surya/Sun]
அதிதேவதை[Atidevatha] : பார்வதி[Parvathi]  


இருப்பிடம்: 

புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் திருவரங்குளத்தை அடையலாம்.

திறக்கும் நேரம்: காலை 7 - 12 மணி, மாலை 5- 7.30 மணி

போன்: +91 - 98651 56430, 99652 11768.

No comments:

Related Posts with Thumbnails