18 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்[மிருகசீர்ஷம்]


ஸ்தல வரலாறு: 
ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது.கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தான். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்தது. இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற் குரிய கோயிலாக போற்றப்படுகிறது.

நித்ய கருட சேவை

பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள் பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திரு விழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் இங்கு தரிசிக்கலாம்.
மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாகக் கூறப்படுகிறது.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால்,அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பது நம்பிக்கை.

பரிகாரத்தலம்: 

உற்சவர் ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச் சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், தோல் நோய் மற்றும் பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அகால மரண சம்பவங்களால் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு நிவாரணம் பெற விரும்புபவர்கள் பவுர்ணமி மற்றும் மிருகசீரிஷ நாட்களில் இங்கு வழிபாடு செய்கிறார்கள். படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

மிருகசீர்ஷம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர்.

இருப்பிடம் :

 தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் எண்கண்ணிலுள்ள கோயிலை அடையலாம்.


பிரதான தேவதை [Pradhana Devatha] : ஸோமன்[Soman]

அதிதேவதை [Atidevatha] : சந்திரன்[Moon]   

*திறக்கும் நேரம்: மாலை 5 - இரவு 7 மணி.

*போன் :+91 - 4366-269 965, 94433 51528

No comments:

Related Posts with Thumbnails