20 October 2010

27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்- [விசாகம் -Visakha] ]


ஸ்தல வரலாறு: 

ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றார்.

அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பினர்.இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன. சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்பம்சம்.

சிறப்பம்சம்: 

விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் ஒரு காலத்தில் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும், அவை இங்கிருக்கின்றன என்ற நம்பிக்கையால், இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம்.  விசாகம் என்றால் மேலான ஜோதி என்று பொருள். இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் இங்கு வந்து வழிபடுவது நல்லது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: 

வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர்.  தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர்.

பிரதான தேவதை [Pradhana Devatha] : இந்திராக்னி [Indragni].
அதி தேவதை [Ati Devatha]  : சுப்ரமண்யர் [Subramanya]

இருப்பிடம் : 

மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.

திறக்கும் நேரம்: காலை 6-பகல் 1 , மாலை 5- இரவு 8.30 மணி.

போன்:+91 - 4633 - 237 131, 237 343.

No comments:

Related Posts with Thumbnails